(A registered, non-profit 501(c)(3) organization)

CELEBRATING 35 YEARS OF INCLUSIVENESS 


பூஞ்சோலை

 • 12/17/2020 9:53 PM | Anonymous

  திரு. ரமணி ராஜன் அவர்களின் பாடல் - SPB பற்றி


  ஏனிந்த பூமிவிட்டு பறந்துசென்றாய் நீவிரைவாய்

  ஏனிந்த பூமிவிட்டு பறந்துசென்றாய் விரைவாய்

  நீயின்று வாடுகின்றோம், உன்னையே தேடுகின்றோம்,

  கலங்குகின்றோம், மீண்டும் பிறந்திடுவாய்

  ஏனிந்த பூமிவிட்டு பறந்துசென்றாய் விரைவாய்...

  உன்னைப்போல் யாருமில்லை, உன்குரல் தேன்கொண்டமுல்லை ஹான்..

  உன்னைப்போல் யாருமில்லை,

  உன்குரல் தேன்கொண்டமுல்லை,

  அன்பிலே இமயமன்றோ, ஆஆஆஆஆஆஆஆஆ

  அன்பிலே இமயமன்றோ, அதைவிட உயரமுமுண்டோ,

  நெஞ்சிலே நிற்கின்றாயே,

  இறங்கிட மறுக்கின்றாயே,

  ஏனோ மன்னா நீயேசொல் ......

  ஏனிந்த பூமிவிட்டு பறந்துசென்றாய் விரைவாய்...

  உலவிடும் தென்றல் நீயே,

  உயிருடன் ஒன்றிவிட்டாயே ஹான்,

  உலவிடும் தென்றல் நீயே,

  உயிருடன் ஒன்றிவிட்டாயே,

  திரையிசை கண்டிராத, ஆஆஆஆஆஆஆஆ

  திரையிசை கண்டிராத,

  வரமாக நீ வந்தாயே,

  புதுஇசை நீயேதந்து,

  புரவியாய் மறைந்தது ஏனோ,

  விண்ணில் இன்பம் ஏனோ சொல்.......

  ஏனிந்த பூமிவிட்டு பறந்துசென்றாய் நீவிரைவாய்

  ஏனிந்த பூமிவிட்டு பறந்துசென்றாய் விரைவாய்

  நீயின்று வாடுகின்றோம், உன்னையே தேடுகின்றோம்,

  கலங்குகின்றோம், மீண்டும் பிறந்திடுவாய்

  ஏனிந்த பூமிவிட்டு பறந்துசென்றாய் விரைவாய்...

  -

  திரு. ரமணி ராஜன்


  https://youtu.be/GpUhiKO1PNs

 • 09/12/2020 11:26 AM | Anonymous

  ஒரு வரி கவிதைகள்

  நான் கண்ட தோல்வி...பாதையாய் மாறியது ....என் வெற்றியை அடைய...

  நான் முட்டாளாய் இருக்க விரும்புகிறேன்... அனுபவத்தை பெற...

  உதவிகள் பல....அதை அனுபவித்தவர்கள் சில...

  "நான் இருக்கிறேன்"....தன்னம்பிக்கை என்னிடம் சொன்னது.

  "மௌனம்" எனக்கு பிடித்த மொழி...அதுவே என் கற்பனையின் வழி.

  "கற்பனை" ... மனிதர்களால் அழிக்க முடியாத ஆயுதம்...

  நேற்று - நான் கடந்து வந்த பாதை

  இன்று - என்னிடம் இருப்பது

  நாளை - அது என் கனவு

  அனல் கூட அணைந்து போகும் - அன்பு எனும் காற்று வீசும்போது

  இலக்கு தூரமாக இருக்கலாம்!

  கடந்து போகும் பாதை கடினமாக இருக்கலாம் !

  செய்யும் வேலையை (தொழிலை) காதலித்து பார்...

  கடினமும் இன்பமாகும், தூரமும் எட்டிய தொலைவில் கிடைக்கும்!!

  - முனைவர் ச. தமிழ் செல்வன்


 • 07/07/2020 4:19 PM | Anonymous

  “கற்பின் கொழுந்தே”
  =================


  அன்பே அமுதே என்றிருந்தேன்; எனை
  அரை நொடியில் நீ மறந்துசென்றாய்

  பொன்னே கொடியே என்று சொன்னாய்; பின்
  பொல்லா  துயரில் தவிக்கவிட்டாய்

  காதல் கண்மணி நானிருக்க ; நீ
  காமம்  தேடி அலைந்துசென்றாய்

  காதலி கண்களை கலங்கவிட்டு ; நீ
  மாதவி மடியில் மயங்கிருந்தாய்

  பாதை தொலைந்து பரிதவித்தேன் ; உன்
  பார்வை என்மேல் படவில்லை

  பொன்னும் பொருளும் தொலைந்தபின்னே;உன்
  கண்ணகி கண்ணில் தென்படுதா ??

  காலில் சிலம்பை கண்டதுமே ; உன்
  கடமை உணர்ச்சி பொங்கிடுதா ??

  கற்பின் கொழுந்தே என்று சொல்லி ; என்
  கண்களை நீயும் மறைப்பாயோ ??

  கண்ட துயரை நான் மறந்து ; உன்
  காலில்  வந்து வீழ்வேனோ ??

  கணவன் உனக்கோ கற்பில்லை ; பின்
  கண்ணகி நானுனை ஏற்பேனா ??

  பாவம் என்றுன்னை மன்னித்தால் ; நாளை
  பாடுபடும் இப்பெண்ணினமே

  கற்பிற்கரசி பெயர் வேண்டாம்
  கடற்கரைசாலை சிலை வேண்டாம்
  கண்ணகி பிரிந்தே வாழ்ந்திடுவாள்
  தண்டனை  இதுவே உனக்காகும்......


  ---செல்வ பெருமாள்


 • 05/12/2020 7:09 PM | Anonymous

  திரு. சரவணகுமார் அவர்களின் தலைமையிலான MSCF நிர்வாக குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் - இவ்விடர் அடர்ந்த சூழலிலும் இம்மெய்நிகர் கொண்டாட்டத்தை மேய்ப்படுத்தி, நீங்கள் உள்ளதை வைத்து எங்கள் உள்ளத்தை வென்றீர்கள்.

  நிகழ்ச்சிகள் அனைத்தும் அழகாகவும், கச்சிதமாகவும் தொகுத்து வழங்கப்பட்டது சிறப்பு. குறிப்பாக தமிழ் தாய் வாழ்த்தில் ஒளிர்ந்த தமிழ் தளங்களின் காட்சிகள் செவிக்கு மட்டுமின்றி விழிக்கும் விருந்திட்டது. பிள்ளைகள் அனைவரும் நம் பாரம்பரிய பரதத்திலும் மேற்கத்திய நடனத்திலும் சிறப்பாக அவரவர் ஆடல் திறனை வெளிப்படுத்தினர். ஆதிவாசி தாலாட்டின் நடன உருவாக்கம் பல்கோணக் குறுங்காட்சிகள் கொண்டு நேர்த்தியாக கையாளப்பட்டிருந்தது மிருத்யுனின் தனித்துவம் - பாராட்டுக்கள்.

  குழுப்பாடல்கள், டிக்டாக்குகள் மற்றும் குறும்படம் என்று இதை ஒரு பல்சுவைநிகழ்ச்சியாக தந்தமைக்கு கலைக்குழுவுக்கு ஒரு 'சபாஷ்'.

  இதில் சிறப்பு அம்சமாக விளங்கியது சிலம்பாட்டம். அரும்புகள், மொட்டுகள், முகைகள் மற்றும் மலர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றது, MSCF இல் பல நுண்கலைகள் மட்டுமின்றி இத்தகைய தற்காப்புக்கலைகளையும் பேணுவது குறிப்பிடத்தக்கது. இக்கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முயற்சிக்காக எங்கள் ஆசான் திரு. சரவணகுமார் அவர்களையும் அவரது ஆசான் திரு. கார்த்திக் அவர்களையும் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

  இறுதியாக - சிறப்பு பட்டிமன்றம் மிக அருமை. நடுவர் அய்யா அவர்கள் கூற்றிற்கிணங்க இதில் பேச்சாளர்கள் மட்டுமின்றி அவர்களின் பேச்சாற்றல்களும் மிகச்சிறப்பாக அமைந்தன. சங்ககாலம் முதல் சார்வரி வரை தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து பற்பல குறிப்புக்களை சேகரித்து வாதங்களில் முன்வைத்தது பாராட்டுக்குரியது.

  மொத்தத்தில் மெய்நிகர் கொண்டாட்டம் மிகச்சிறப்பு. குழு நிர்வாகிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளும்! பாராட்டுக்களும்!!.


  --ராம்ஜி


 • 05/12/2020 6:57 PM | Anonymous

  வள்ளுவன் வரிகளில் அகழ்வாரைத் தாங்கி

  பொறுமைக்கு உவமையான நிலமும்

  பேரலையாய் எரிமலையாய்

  வெடித்துச் சிதறுவது நிகழும் - ஆனால்

  மணமுடித்து மதுரைவந்து மறுமணை புகுந்த நாள்முதல்

  பேரன்கள் பெயர்த்திகள் எடுத்தும் இந்நாள்வரை சினம்தள்ளி

  பொறுமைக்கே பெருமை சேர்த்து சிகரமானாள் - அவள்

  இக்காலப் பெண்டிர்க்கு அகரமானாள்

  மறுஅன்னை வலக்கரமாய் நலம்தந்தாள் இல்லத்திடையில்

  கடிகார நொடிக்கரமாய் வலம்வந்தாள் மனைமடையில்

  திடம்கொண்ட பணிநடுவே இடமில்லை பிணிக்கு

  தலைவலியோ காய்ச்சலோ சிற்றுண்டி ஏழு மணிக்கு

  தந்தைக்குப்பின் தலைமகன் குடும்பப் பொறுப்பேற்க

  தமக்கைகள் கரையேற்ற கடல்கடந்து பொருளீட்ட

  பெற்றோர் காண மனம் முழுதும் தவியாய் தவித்திருந்தும்

  உற்றோர் வாழ உடனிருந்து பணிபுரியும் பொறுப்பிருந்து

  தியாகத்தையும் யோகமென கண்டவள் - அவள்

  மற்றோர்களிடம் மெய்யன்பு கொண்டவள்

  உழைப்புக்கும், செழிப்புக்கும், பொறுமைக்கும், பொறுப்புக்கும்,

  உறவுக்கும், நிறைவுக்கும் அனைத்துக்கும் சேர்த்து

  தன வாழ்வை உதாரணமாக்கிக் கொண்டவள் - அவள்

  என் பிறப்பிற்கே விதையாகி நின்றவள்.

  - ராம்ஜி


 • 03/21/2020 5:47 PM | Anonymous

  மத்திய புளோரிடா முத்தமிழ் சங்க இயக்குனர் குழுத் தலைவர் - வாழ்த்துரை

  மத்திய புளோரிடா தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு முதற்கண் வணக்கம்.

  நம் தமிழ் சங்கம் தொடங்கி முப்பத்துநான்காம் ஆண்டில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாலே உள்ளம் மகிழ்கிறது.  இந்த தருணத்தில் நம் சங்கத்தை தொடங்கியதிலிருந்து இன்றுவரை சங்கம் வளர உதவிய அத்துணை உருவாக்கிய, நெறிப்படுத்திய, செயல்படுத்திய குழுக்கள் மற்றும் அதனினும் மேலாகிய அனைத்துவிதமான உறுப்பினர்களுக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  நாம் எல்லோரும் ஏற்கனவே அறிந்த உலகளாவிய நோய் கிருமி அச்சுறுத்தலால் சற்றே நம் பணிகளில் காலதாமதங்களை சந்தித்தாலும், நம் தமிழ் உணர்விலும் புத்துணர்ச்சியிலும் என்றும் தவறமாட்டோம் என்று விரைவில் வீறுகொண்டு பணியாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறது நம் மத்திய ப்ளோரிடா முத்தமிழ் சங்கம். அதற்கொரு உதாரணமே இந்த பூஞ்சோலை இதழ் வெளியீடு. 

  பூஞ்சோலை இதழை புதுப்பொலிவுடன் உங்கள்   இல்லங்களுக்கு புது கருத்து மலர்களுடன் உள்ளம் மகிழ வந்தடைய முயற்சிகள் மேற்கொள்ளும் திருமதி.பிரியதர்ஷினி பிரசாத் மற்றும் பத்திரிக்கை குழு, இந்தாண்டின் செயற்குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

  உங்கள் நண்பர்களையும் நம் மத்திய புளோரிடா முத்தமிழ் சங்க உறுப்பினர்களாகப் பங்குபெறச்செய்து உலகின் தலைச்சிறந்த செம்மொழியாம் நம் மொழியையும், தமிழ் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டினையும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல உதவவும்.

  வாழ்க தமிழ்! வளர்க நம் முத்தமிழ் சங்கம்!! 


  பாபு பாலசுந்தரம்

  Chairman MSCF Board of Directors
 • 02/25/2020 11:50 AM | Anonymous

  அன்புடையீர், 

                அனைவருக்கும்  என் பணிவான வணக்கங்கள். என் பெயர் பிரியதர்ஷினி பிரசாத். நம் மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கத்தில், கடந்த ஐந்து வருடங்களாக சங்க உறுப்பினராகவும், இயன்றளவு தன்னார்வத் தொண்டாற்றி  வருவதில் பெருமைக் கொள்கிறேன். 

  தானஇன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

  காமுறுவர் கற்றறிந் தார்.

                                                        -திருவள்ளுவர் 

  பொருள்:

   

               கற்றக் கல்வியால், தான் மட்டுமின்றி உலகமும் பயன் அடைவது கண்டு கற்றறிந்தவர்கள் மேலும் மேலும் தாம் கற்கவும், கற்பிக்கவும் விரும்புவார்.   

                     மேலே கூறப்பட்ட திருக்குறளின்படி நம் MSCF-சங்க உறுப்பினர்களும் தங்களுக்கு தெரிந்ததை பிறருக்கு தெரியப்படுத்தவும், கற்றுக் கொள்ளவும் உதவியாக கட்டுரைகள், கவிதைகள், சமூக கருத்துக்கள், ஓவியங்கள்,சமையல் குறிப்புகள் மற்றும் பிற துறையைப் பற்றியும்  தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட ஒரு பொது மேடையை இந்தப் பூஞ்சோலை வலைத்தள பத்திரிக்கை அமைத்துத் தரும் என நம்புகிறேன். மேலும் நாளைய உலகின் நாயகர்களான நம் சிறுவர், சிறுமியர் நம் தாய் மொழியான தமிழிலும், அவர்களின் தனித் திறமையால் தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மென்மேலும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் தொடங்கப்பட்டதே பூஞ்சோலை”. 

                   இந்தப் பூஞ்சோலை பல வண்ணங்களில் மலர “MSCF 2020 EC TEAM”–  சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அடுத்து வரும் இதழ்களில் உங்கள் படைப்புக்களை வெளியிட தயவு கூர்ந்து https://forms.gle/QQ1Fx511hmECVPBH9 என்ற இந்த இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதில் உங்களின் படைப்பை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

   

  பின்குறிப்பு

  v  இந்த பூஞ்சோலை பத்திரிக்கை நம் - MSCF முகப்பு பக்கத்திலேயே இருப்பதால் இது நம் சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மட்டுமே பிரதி இடப்படும்.

  v  பதிப்புரிமை உரிமையாளரிடமிருந்து அனுமதி பெற்று வெளியிடப்படும்.

  v  எங்கள் வலைத்தள பத்திரிக்கையில் உறுப்பினர் வெளியிடும் கருத்துகள் மற்றும் தகவல்களுக்கு MSCF  எந்தப் பொறுப்பையும் ஏற்காது.

  v  அதோடுமட்டுமல்லாமல் நீங்கள் அனுப்பும் தொகுப்புகள், ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது சமூகத்தையோ சாடுவதாக இருப்பின்  அத்தகைய தொகுப்புகள் பொதுநலம் கருதி வெளியிடப் படாது.

   

              Muthamizh Sangam of Central Florida, Inc.  |  1156 Hollow Pine Dr, Oviedo, FL 32765   | contact us at mscf.ec@gmail.com

A registered, non-profit 501(c)(3) organization. Your contributions may be tax deductible. MSCF's Tax ID is 59-3327604.

Powered by Wild Apricot Membership Software